வெள்ளி, 12 ஜூலை, 2019

அடிப்படை உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதனை தடுக்க பெண்கள் முன்வரவேண்டும்

பாறுக் சிஹான் -
கணவர் என்ன செய்கிறார் எமது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை மனைவியாக, தாயாக இருக்கின்றவர்கள் அதனை பொறுப்புணர்வுடன் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்திருப்பதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதனை தடுத்துக்கொள்ள முன்வரவேண்டும். இந்த நிலைமையிலிருந்து விடுபட்டவராக சஹ்ரானின் மனைவி இருந்துள்ளார் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
மாதர்களுக்கான மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி கபூர் தலைமையில் (12) மாலை இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் எமது நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை என்பது தான் இங்கு கேள்விக்குட்படுத்த வேண்டியதாகும். அவ்வாறு நடந்தால் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பாரிய அனர்த்தங்களை எம்மால் தடுக்க முடியும். அத்துடன் போதைப்பொருளை பாரிய அளவில் கடத்தும் நபர்களுக்கு எதிராக அதிகபட்ச தண்டணையாக மரண தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன், மதஸ்தலங்கள் தாக்கப்படுதல், வியாபார ஸ்தானங்கள் தாக்கப்படுதல், மத அடிப்படையிலான ஆடைகளுக்கு தடை விதிப்பு, ஏனைய மதத்தை பின்பற்றும் கடும்போக்குவாதிகளால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுதல், என்பன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையகம், ஹியுமன் றைட்ஸ் வொச் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் இவைகள் நிறுத்தப்படுவதாக இல்லை. இந்த செயற்பாடுகளை எமது பேரவை கண்டிக்கிறது.
வாழும் இடத்தில் மனித சுதந்திரம் பறிக்கப்பட்டால்

அல்லது சூறையாடப்பட்டால் அது மனித உரிமை மீறலாகும். அப்படியான மனித உரிமை மீறும் சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் அதிக செயற்பாடுகள் எதிர்காலத்திற்கு உகந்தவையாக இருக்காது. அவை நல்லிணக்கத்திற்கு எதிரானதாகவே காணப்படம். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்று ஒரு சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் விசம பிரச்சாரங்கள் அச் சமூகத்தின் உரிமகளை பறிப்பதை எவரும் ஏற்க போவதில்லை. இதற்கான உடனடி தீர்வை சம்பந்தப்பட்ட அனைவரும் எடுக்க வேண்டும்.
மத அடிப்படையிலான ஆடை விடயத்திற்காக உரிய தீர்வு உடன் எடுக்கப்படவேண்டும். கடும்போக்குவாத மத அமைப்புகள் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டும். அவ்வமைப்புகள் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும் இவ்வாறு செய்வோமானால் எமது மனித உரிமைகள் பாதுாகாக்கப்பட்டு நீதி பேண உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக