ஞாயிறு, 14 ஜூலை, 2019

இராணுவத்தின் கப் கவிழ்ந்ததில் சிப்பாய் ஒருவர் பலி 8 பேர் படுகாயம்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை (14) இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 8 சிப்பாய்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இராணுவ முகாம் அமைந்துள்ள வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே இந்த கப் ரக வாகனம் கவிழ்ந்தது.
அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவரே பலியாகினார். அதில் பயணித்த 8 பேர் படுகாயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Jazi)

சனி, 13 ஜூலை, 2019

பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய நிகழ்வு

பத்து இலட்சம் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று (14) திருகோணமலை மெக்கைசர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காணி அமைச்சர் கயந்த கருனாதிலக்க, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபிக், அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், துரைரட்னசிங்கம், சந்தீப் சமரசிங்க, உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரம் இல்லாதவர்களுக்கு உறுதிகளை வழங்கி வைத்தனர்.

ரத்தின தேர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்

அஷ்ரப் ஏ.சமட்
றிசாத் பதியுத்தீன் அமைச்சிப் பொறுப்பினை மீள பாரமெடுத்தால் சிகல உருமைய கட்சியின் பா.உ அத்துரலெலிய ரத்தின தேரர் தூக்கிலிட்டு தொங்குவேன் என ஊடகங்களில் சொல்லியிருந்தால் - அவர் அணிந்திருக்கும் பௌத்த சீருடைக்கும், இந்த நாட்டின் பௌத்த மத்தித்திற்கும் இழைக்கும் பாரியதொரு குற்றமாகும். உடனடியாக பொலிசார் அவரை கைது செய்து அவரை பாதுகாக்கவேண்டும்.
தூக்கில் தொங்குவேன் என சொல்லியிருந்தால் கூட அது பாரதூரமான குற்றமாகும். என நேற்று (13) மட்டக்குழிய சேர்
ராசிக் பரீட் பாடசாலையின் நடைபெற்ற வைபவத்தின் பின்னர் - ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கே பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபு ரகுமான் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் அங்கு தெரிவித்தாவது,
முஸ்லிம் அமைச்சர்கள் மீள அமைச்சுக்களை பாரம் எடுப்பின் பின்வரிசை ஐ.தே.கட்சி உறுப்பிணர்கள் எதிர்ப்பு எனவும் ஊடகங்களில் சொல்லப்பட்டிருந்தது. அவ்வாறு ஒருபோதும் பின்வரிசை உறுப்பிணர்கள் எவ்வித முடிவுகளும் எடுக்க வில்லை. முஸ்லிம் அமைச்சர்கள் - தான் சாந்த சமுகத்திற்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் மீள சேவையாற்ற முடியும் அவர்கள் ஒரு மாத காலக்கெடு கொடுத்தே தமது பதவிகளை துறந்தார்கள்அவர்கள் மேற்படி தாக்குதலில் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை.
அதனையே பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் மற்றும் குற்றப் பிரிவு பொலிஸாருக்கும் தெளிவுபடுத்தியுள்ளாரகள் சில வக்குரோத்து இனவாத அரசியல் வாதிகள் வேண்டுமென்று இவ் அரசினை குழப்புவதற்கும் அவர்கள் திட்டமிட்ட சதிகளுக்கும் மேற்படி தாக்குதலை வைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது பழி சுமத்தினார்கள். இது அவர்ககளது அரசியல் உள்நோக்கமே அது பழிக்கவில்லை.என பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபு ரகுமான் கருத்து தெரிவித்தார்.

ஸஹ்ரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி?


ஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது.
அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி, சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக அழுகிறார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து 5 நாட்களுக்குப் பின்னர், சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில், ஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்ததால், அவர்களில் 15 பேர் இறந்தனர்.
ஸஹ்ரானின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவர்களைச் சேர்ந்த சிறுவர்கள் என மொத்தம் 15 பேர் அப்போது உயிரிழந்தனர்.
இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு ஸஹ்ரான் குழுவினர் தங்கியிருந்தபோது, அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சுற்றி வளைக்கப்பட்டனர்.
இதனை அடுத்தே, அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.
குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்த ஸஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர், காயங்களுடன் அந்த வீட்டிலிருந்து மறுநாள் மீட்கப்பட்டார்கள்.
சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில்தான், குண்டு வெடிப்பு நடந்த வீடும் உள்ளது. ஆதம்பாவா என்பவருக்கு இந்த வீடு சொந்தமானதாகும்.
அந்த தற்கொலைக் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் ஏப்ரல் 27 ஆம் திகதி, ஆதம்பாவாவை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், அம்பாறை பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் மனைவி அமீதா தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது - பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் வீடு பெற்ற அமீதாவை சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. ஸஹ்ரான் குழுவினருக்கு எப்படி உங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தீர்கள் என்று நாம் கேட்டபோது, நடந்தவற்றை அவர் விரிவாக கூறத்தொடங்கினார்.
"எனது கணவர் மீன் பிடிக்கும் தொழிலாளி. அன்றாடம் அவர் உழைப்பதை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டி வந்தோம். எங்களுக்கு இங்கு ஒரு வீடு உள்ளது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் குண்டு வெடித்த வீடும் உள்ளது. அந்த வீடு விற்பனைக்கு வந்தமையினால் எங்கள் மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டு அதனை வாங்கினோம்.
கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி, எங்கள் பகுதியைச் சேர்ந்த நியாஸ் மற்றும் சஜீத் ஆகியோர் அந்த வீட்டை வாடகைக்கு கொடுப்பீர்களா என்று கேட்டார்கள். நாங்களும் இணங்க, மாத வாடகை மற்றும் ஏனைய விவரங்களை எங்களிடம் கேட்டுப் கொண்டு அவர்கள் சென்றார்கள்.
ஏப்ரல் 16 ஆம் திகதி வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு ஒருவர் வந்தார். அவர் யார் என்று எமக்குத் தெரியாது. குண்டு வெடிப்பு நடந்த பின்னர், அந்த வீட்டின் முன்பாக துப்பாக்கியுடன் இறந்து வீகிடந்தவர் தான் வாடகைக்கு வீடு எடுக்க வந்தவர் என்பதை பிறகு அறிந்து கொண்டோம்" என்றார் அமீதா.
ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்த நியாஸ் என்பவர்தான் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கியுடன் இறந்து கிடந்தார். முன்பு அவர் ஓர் ஊடகவியலாளராகப் பயணியாற்றியவர். அவர் பற்றிய தகவலை, அவர் இறந்த பின்னர் பிபிசி தமிழ் விரிவாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமீதா தொடர்ந்து பேசினார். "வீட்டுக்கு மாத வாடகையாக 5 ஆயிரமும், முன்பணமாக 50 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு கேட்டோம். 25 ஆயிரம் ரூபாவை முதலில் தந்தார். மீதியை வாடகை ஒப்பந்தம் எழுதும்போது தருவதாகக் கூறினார்.
தாங்கள் காத்தான்குடி என்றும், தனது தம்பி அம்பாறையில் தொழில் செய்வதால், அவர் இங்கு தங்கி வேலைக்குச் செல்வது எளிதானது என்றும், அதனாலேயே, தம்பியும் அவர் குடும்பமும் தங்குவதற்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுப்பதாகவும் அவர் கூறினார்.
ஏப்ரல் 18 ஆம் திகதி காலை 6.30 மணியிருக்கும், வாடகைக்குப் பெற்ற வீட்டில் லாரி ஒன்றில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் இறக்கப்பட்டன. இந்த வீட்டில் எத்தனை பேர் தங்கியிருந்தார்கள் என்று, சம்பவம் நடக்கும் வரை எங்களுக்கு தெரியாது.
18 ஆம் திகதி வீட்டுக்கு குடிவந்தவர்கள், இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு 20 ஆம் திகதி அன்று எங்கேயோ சென்று விட்டார்கள். இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் நான்கு பிள்ளைகளும் வீட்டிலிருந்து ஒரு வேனில் சென்றதைக் கண்டோம். பிறகு 26 ஆம் திகதி, சம்பவம் நடைபெற்ற தினம் தான் அந்த வீட்டுக்கு மீண்டும் ஆட்கள் வந்தனர்.
இவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களை இங்கு தங்க வைக்க வேண்டாம் என்று, எங்கள் பகுதியிலுள்ள பொதுமக்கள் கூறினார்கள். அல்லது, இவர்கள் பற்றிய தகவலை கிராம உத்தியோகத்தரிடம் பதிவு செய்யுங்கள் என்று பக்கத்திலுள்ளோர் எம்மை அறிவுறுத்தினார்கள்.
அதன்படி எனது கணவரும் நானும் கிராம சேவை உத்தியோகத்தரிடம் சென்றோம். அவர் பிறகு வருவதாகக் கூறி, விடயத்தை எமது பகுதி பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடமும் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அறிவித்தோம். அவர்கள் இந்த வீட்டிற்கே வந்தனர். இது நடக்கும்போது மாலை 6 மணியிருக்கும்.
அங்கு வாடகைக்கு இருந்தவர்களிடம் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பேசினர். உங்களைப் பற்றிய விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். அல்லது இங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர். மறுநாள் காலை 10 மணி வரை தமக்கு அவகாசம் வழங்குமாறும், அதன் பிறகு தாங்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுவதாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது, அங்கு மக்கள் திரள் கூடிவிட்டது. வீட்டில் இருப்பவர்களை தாங்கள் பார்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதற்கிடையில், அந்த இடத்திலிருந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெண்களை அகன்று செல்லுமாறு, எமது தரப்பு ஆண்கள் கூறினார்கள். நாங்கள் வந்து விட்டோம். அதற்குப் பிறகுதான் அங்கு குண்டு வெடித்தது.
அங்கு என்ன நடந்தது என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டோம். மறுநாள் காலை, அருகிலுள்ள பாடசாலை மைதானத்தில் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.
குண்டு வெடிப்பு நடந்து மறுநாள் 27 ஆம் திகதி, பொலிஸார் எனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். அவரை நேற்றும் சென்று பார்த்தேன். அம்பாறை பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். சுமார் இரண்டரை மாதங்களாகியும் அவரை விடுவிப்பதாக இல்லை.
´´நாங்கள் ஏழைகள். ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்தோம். ஆனால் இப்படியாகி விட்டது" என்று கூறி அழுகிறார் அமீதா.
(பிபிசி தமிழ்)

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வேட்பாளரை பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முஸ்லிம் வேட்பாளருக்கு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்ற போதிலும், முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளதாகவும்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இவ்வாறு முஸ்லிம் பிரதிநிதியொருவர் தேர்தலில் போட்டியிட்டது கிடையது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 12 ஜூலை, 2019

தொழில் வாய்ப்பு

பீடாதிபதியாக கடமைப் பொறுப்பேற்பு

                                                        பைஷல் இஸ்மாயில் - 

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதிக்கான தேர்வில் கூடுதல் வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் தனது கடமைகளை நேற்றய தினம் (12) பொறுப்பேற்றுக்கொண்டார்.

அடிப்படை உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதனை தடுக்க பெண்கள் முன்வரவேண்டும்

பாறுக் சிஹான் -
கணவர் என்ன செய்கிறார் எமது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை மனைவியாக, தாயாக இருக்கின்றவர்கள் அதனை பொறுப்புணர்வுடன் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்திருப்பதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதனை தடுத்துக்கொள்ள முன்வரவேண்டும். இந்த நிலைமையிலிருந்து விடுபட்டவராக சஹ்ரானின் மனைவி இருந்துள்ளார் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார்.
மாதர்களுக்கான மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி கபூர் தலைமையில் (12) மாலை இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் எமது நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும். அதை அவர் செய்யவில்லை என்பது தான் இங்கு கேள்விக்குட்படுத்த வேண்டியதாகும். அவ்வாறு நடந்தால் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பாரிய அனர்த்தங்களை எம்மால் தடுக்க முடியும். அத்துடன் போதைப்பொருளை பாரிய அளவில் கடத்தும் நபர்களுக்கு எதிராக அதிகபட்ச தண்டணையாக மரண தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன், மதஸ்தலங்கள் தாக்கப்படுதல், வியாபார ஸ்தானங்கள் தாக்கப்படுதல், மத அடிப்படையிலான ஆடைகளுக்கு தடை விதிப்பு, ஏனைய மதத்தை பின்பற்றும் கடும்போக்குவாதிகளால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுதல், என்பன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையகம், ஹியுமன் றைட்ஸ் வொச் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் இவைகள் நிறுத்தப்படுவதாக இல்லை. இந்த செயற்பாடுகளை எமது பேரவை கண்டிக்கிறது.
வாழும் இடத்தில் மனித சுதந்திரம் பறிக்கப்பட்டால்

அல்லது சூறையாடப்பட்டால் அது மனித உரிமை மீறலாகும். அப்படியான மனித உரிமை மீறும் சம்பவங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் அதிக செயற்பாடுகள் எதிர்காலத்திற்கு உகந்தவையாக இருக்காது. அவை நல்லிணக்கத்திற்கு எதிரானதாகவே காணப்படம். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்று ஒரு சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் விசம பிரச்சாரங்கள் அச் சமூகத்தின் உரிமகளை பறிப்பதை எவரும் ஏற்க போவதில்லை. இதற்கான உடனடி தீர்வை சம்பந்தப்பட்ட அனைவரும் எடுக்க வேண்டும்.
மத அடிப்படையிலான ஆடை விடயத்திற்காக உரிய தீர்வு உடன் எடுக்கப்படவேண்டும். கடும்போக்குவாத மத அமைப்புகள் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டும். அவ்வமைப்புகள் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும் இவ்வாறு செய்வோமானால் எமது மனித உரிமைகள் பாதுாகாக்கப்பட்டு நீதி பேண உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோடீஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட வேண்டும்


முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் சரிந்துபோயுள்ள வாக்குகளை சரிசெய்வதற்கான முயற்சியில் கோடீஸ்வரன் ஈடுபடுகிறார், தமிழ் பேசும் இரண்டு சிறுபான்மை சமூகமும் என்றுமே ஒற்றுமைபட்டுவிட கூடாது என்பதிலும் அவர் குறியாக இருக்கிறார். அவர் தமிழ் கூட்டமைப்பில் இருந்து முற்றாக விலக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
முழு முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக காட்டி நாளும் பொழுதும் மக்கள் மத்திலயில் விஷ கருத்துக்களையே பரப்பி வருகிறார், இவ்வாறு தன்னை இனம்காட்டுவதனால் கோடீஸ்வரன் தமிழ் மக்களின் அபிமானியாக ஒரு விம்பத்தினை ஏற்படுத்தும் முயற்சிக்கு தமிழ் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். 

இவ்வாறான இனவாதிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும். சிறுபாண்மை தமிழ் பேசும் மக்களின் நெருக்கமான உறவுக்குள் பிளவுகளை உண்டுபண்ணும் இவர்களை சரியாக இனம்காண வேண்டும். 

தூங்கி எழும்பினால் இனவாத பேச்சுக்களையே பேசுகிறார். இவரின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.

அத்துடன் தமிழ் தலைவர்களான சம்பந்தன் ஐயா சுமேந்திரன் ஐயா ஸ்ரீதரன் ஐயா போன்றவர்களிடம் இவர் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

ஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, பதவிகளை துறந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க தீர்மானித்துள்ளனர்.

அடுத்தவாரம் அவர்கள் தமது, அமைச்சுக்களை மீள ஏற்பார்கள் எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.
பதவிகளை துறந்தவாகளில் ஒருவரைத் தவிர, ஏனைய சகலரும் தமது பதவிகளை மீள ஏற்கவுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே பதவியை பாரமெடுப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி மேயராக யாசீர் கடமையேற்பு

எம்.சீ.எம்.யாசீர் 
பைஷல் இஸ்மாயில்
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்த அஸ்மி ஏ. கபூர் கடந்த மார்ச் மாதம் குறித்த பதவியினை இராஜினாமாச் செய்தார்.
தனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் சிபார்சில் எம்.சீ.எம்.யாசீர் பிரதி மேயராக நியமிக்கப்பட்டார்.
இவர் தனது கடமைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) மாலை 4.00 மணியளவில் மாநகர பிரதிமேயர் காரியாலயத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

வியாழன், 11 ஜூலை, 2019

நீர்த்தாங்கியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு




மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி  தோட்டாக்கள் மீட்கப்பட்டது.

இன்று (11) பகல் கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்து இவைகள் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மற்றும் ரீ 56 ரக துப்பாக்கிக்கான 63 தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஞானசார தேரரின் மன்னிப்பை இரத்து செய்யக் கோரிய மனு செப்டம்பர் 10 விசாரிக்க தீர்மானம்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பை இரத்து செய்யக் கோரி, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ள உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவே இந்த வழக்கை செப்டம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதி பிரசன்ன ஜயவர்தன மற்றும் நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோரே இத்தீர்மானத்தை அறிவித்தனர்.

பீடாதிபதியாக இளம் வயதில் சாதனை


பைஷல் இஸ்மாயில்
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதிக்கான தேர்வு இன்று (11) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கூடுதல் வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக இளம் வயதில் தெரிவானவர் என்ற சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.